தமிழ்நாடு செய்திகள்

ராசிபுரத்தில் 17-ந்தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2025-11-13 11:24 IST   |   Update On 2025-11-13 11:25:00 IST
  • திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு TIDEL Park அமைக்க உள்ளது.
  • மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ் நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்குக்கூட பல்வேறு வகைகளில் சிரமப்பட வேண்டிய அவலநிலை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். இச்செயல், வாக்களித்த மக்களுக்கு திமுக செய்து வரும் மாபெரும் துரோகமாகும்.

கடந்த 54 மாத காலமாக, வெற்று விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வரும் விடியா திமுக ஆட்சியில், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி, இராசிபுரம் பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு TIDEL Park அமைக்க உள்ளது. இங்கு TIDEL Park அமைக்கப்பட்டால் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு போதிய பாதுகாப்பு இருக்காது என அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த வேதனையுடன் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றனர். மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறிய விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில், இராசிபுரம் பகுதியில் திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TIDEL Park அமைக்க இருக்கும் விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை வேறு இடத்தில் செயல்படுத்திட வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் 17.11.2025 திங்கட்கிழமை காலை 10 மணியளவில், ராசிபுரம் ஆண்டகலூர் கேட், திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில், கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி. தங்கமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், கழக சட்டமன்ற உறுப்பினர். கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும் கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் ஆட்சியின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News