தமிழ்நாடு செய்திகள்

முத்தரையர் 1350-வது சதய விழா: அ.தி.மு.க. சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- எடப்பாடி பழனிசாமி

Published On 2025-05-20 13:56 IST   |   Update On 2025-05-20 13:56:00 IST
  • கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார்.
  • திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படுபவர்; சங்க காலத்தில் உதித்த சரித்திர நாயகர்; முத்தரையர் இனத்தின் குலதெய்வக் கடவுள்களில் ஒருவராக போற்றப்படுபவர்; முது தமிழுக்கு மெய்கீர்த்தி கண்ட போற்றுதலுக்குரியவர், பெரும்பாட்டன் பேரரசர் சுவரன்மாறன் முத்தரையர் (எ) இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார்.

தமிழ் மொழியைக் காப்பதிலும், தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளில் பதித்து அவை, காலத்திற்கும் நிலைபெறச் செய்ததிலும் பேரரசர் பெரும்பிடு முத்தரையர் ஆற்றிய பணிகளை வரலாறு பதிவு செய்கிறது. கன்னித் தமிழை வளர்த்தவர்களில் முதன்மையாக இடம்பெறுபவர் பெரும்பிடுகு முத்தரையரே ஆவார்.

போற்றுதலுக்குரிய பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது சதய விழாவை முன்னிட்டு, அ.தி.மு.க.வின் சார்பில் வருகிற 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News