அ.தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை பதிவிட்டு மக்கள் ஆதரவை பெற வேண்டும்- எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
- நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
- கூட்டத்தின் போது மாவட்டச்செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பல அறிவுரைகளை வழங்க உள்ளார்.
சென்னை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.
இதன்படி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு நிர்வாகிகளோடு ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நேற்றும், இன்றும் அவர் ஆலோசனை நடத்தினார்.
39 மாவட்டங்களிலும் உள்ள தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இன்றைய காலகட்டத்தில் அரசியல் கட்சிகளின் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலமாகவே விரைவாக கொண்டு சேர்க்க முடியும் என்பதால் அதனை செயல்படுத்துவதில் அ.தி.மு.க.வினர் முக்கிய பங்காற்ற வேண்டும் என்கிற வகையிலேயே 2 நாட்கள் நடைபெற்ற கூட்டத்திலும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஐ.டி. பிரிவு நிர்வாகிகள் தங்களது மாவட்டங்களில் கட்சிக்கு ஒவ்வொரு தொகுதியிலும் செல்வாக்கு எப்படி உள்ளது? என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளை செயல்பட வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகிய இரண்டு தலைவர்களும் முதலமைச்சராக இருந்தபோதும் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும் சாதனை பட்டியலை தயாரித்து அதனை சமூக வலைத்தளங்கள் மூலமாக கொண்டு சேர்த்து மக்களின் ஆதரவை முழுமையாக பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் எப்படி செயல்படுகிறார்கள்? கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பது பற்றியும் ஐ.டி. பிரிவினரிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டு உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் நாகரீகமான கருத்துக்களை பதிவிட்டு அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியில் அமரும் வகையில் தகவல் தொழில்நுட்ப அணிகளை சேர்ந்தவர்கள் முழுமையாக களம் இறங்கி செயல்பட வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்த 2 நாட்கள் கூட்டத்திற்கு பிறகு நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெறுகிறது.
ஐ.டி. பிரிவு நிர்வாகிகளோடு நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி திரட்டி வைத்துள்ள தகவல்களை வைத்துக்கொண்டு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்கு எடப்பாடி பழனிசாமி முடிவு செய்திருக்கிறார்.
இந்த கூட்டத்தின் போது மாவட்டச்செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பல அறிவுரைகளை வழங்க உள்ளார்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக இருந்து வரும் மக்கள் பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி ஐ.டி. பிரிவினர் சமூக வலைத்தளங்களில் மேற்கொள்ள உள்ள பிரசாரங்களுக்கு மாவட்டச் செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் இதை மீறி செயல்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தின் போது எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.