தமிழ்நாடு செய்திகள்

முதன்மை செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் - ம.தி.மு.க. கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தல்

Published On 2025-04-20 12:13 IST   |   Update On 2025-04-20 12:13:00 IST
  • துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் ஆங்காங்கே மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடப்பது பற்றி பேசப்பட்டது.
  • ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சென்னை:

ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே உருவான மோதலில் துரை வைகோ திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இன்றைய நிர்வாக குழு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பதாகவும், வருங்காலத்தில் முக்கிய ஆலோசனை கூட்டத்தில் பங்கெடுக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளார்.

அவரது இந்த முடிவு கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ம.தி.மு.க.வில் இருந்து மூத்த நிர்வாகிகள் பலர் விலகிய போதும் கடந்த 32 ஆண்டுகளாக வைகோவுடன் இருப்பவர் மல்லை சத்யா. வைகோவின் நிழலாக இருப்பவர், மூத்த நிர்வாகி என்பதால் கட்சியில் அவருக்கென்று தனி செல்வாக்கும் இருக்கிறது.

ஆனால் துரை வைகோவின் வருகைக்கு பிறகு நிலைமை மாறியது. துரை வைகோவுக்கும் ஆதரவாக சிலர் மாறினார்கள். அதே நேரம் மல்லை சத்யா கட்சிக்குள் பெயர் வாங்குவது பிடிக்கவில்லை.

இதை அடுத்து அவரை மட்டம் தட்டும் வேலைகள் ரகசியமாக தொடங்கியது. சென்னையில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் மல்லை சத்யாவை அழைக்க கூடாது. அவரது போட்டோவையும் பேனர்களில் போடக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக உருவெடுத்த இந்த ஆவேச 'பொறி'க்கு துரை வைகோவின் ஆதரவு வட்டாரங்கள் நெய் ஊற்றி எரிய வைத்தன. அதன் தொடர்ச்சியாக மாவட்டங்களில் மல்லை சத்யாவுக்கு எதிராக தீர்மானங்கள் போட தொடங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தாயகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மல்லை சத்யா கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக துரை வைகோ நேரடியாகவே குற்றம் சாட்டினார். அவ்வாறு மோதிக் கொண்டது வைகோவுக்கும் பிடிக்கவில்லை. இதை அடுத்து கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக விவாதித்து பிரச்சனைக்கு தீர்வு காணத்தான் இன்று நிர்வாக குழு கூட்டத்தை வைகோ கூட்டினார்.

ம.தி.மு.க. நிர்வாக குழு கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் இன்று நடந்தது. வைகோ தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் துரை வைகோ, அவைத் தலைவர் அர்ஜூன் ராஜ், துரை வைகோ, துணை பொதுச் செயலா ளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, முருகன், உதயா, ராஜேந்திரன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் துரை வைகோ மற்றும் மல்லை சத்யாவுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் ஆங்காங்கே மல்லை சத்யாவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் நடப்பது பற்றி பேசப்பட்டது.

ம.தி.மு.க. முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகியது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

துரை வைகோவின் விலகல் குறித்து நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்கப்பட்டது. கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்கக்கூடாது. முதன்மை செயலாளர் பொறுப்பில் துரை வைகோ தொடர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

மேலும் தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சி பணிகள், மாநாடுகள், போராட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன.

Tags:    

Similar News