தமிழ்நாடு செய்திகள்

கனமழை எச்சரிக்கையால் பம்பை ஆறு வெறிச்சோடி காணப்பட்டது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலை சன்னிதானம் செல்ல தடை

Published On 2024-12-03 12:43 IST   |   Update On 2024-12-03 12:43:00 IST
  • சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • கனமழையால் சபரிமலை அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது.

கூடலூர்:

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் புயல் தாக்கம் கேரளாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், 40 கி.மீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தினம் திட்டா மாவட்டத்துக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக சபரிமலை, நிலக்கல், பம்பை உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது. நேற்றும் மழை நீடித்த நிலையில் பக்தர்கள் சன்னிதானம் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வழியோரம் உள்ள கடைகளில் ஒதுங்கி மழை நின்ற பிறகு பின்னர் மீண்டும் சென்றனர்.

ஒரு சில பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் வானிலை மையம் அறிவிப்பின் காரணமாக பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

சாரல் மழை மற்றும் பனி மூட்டம் காணப்படுவதால் வண்டி பெரியாறு அருகே சத்திரத்தில் இருந்து புல்மேடு வழியாக சன்னிதானத்துக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதே போல் பெரிய பாதை எனப்படும் எருமேலியில் இருந்து முக்குழி வழியாகவும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் எருமேலியில் இருந்து பம்பை வரை வாகனங்களில் சென்று பின்னர் அங்கிருந்து மரக்கூட்டம், நீலிமலை, சரங்குத்தி வழியாக சன்னிதானத்துக்கு சென்று வருகின்றனர்.

இது குறித்து விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் புயல் காரணமாக இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே புல்மேடு வழியாக சன்னிதானம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

கனமழையால் சபரிமலை அடிவாரத்தில் உள்ள பம்பை ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளது. எனவே நதியில் குளிக்கவும், இதனை கடந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மறு உத்தரவு வரும் வரை இதனை பக்தர்கள் கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பம்பையில் நேற்று மதியம் நீர்வரத்து சீராகியதால் போலீசார் கண்காணிப்பில் பக்தர்கள் குளிப்பதற்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். இருந்தபோதும் வெள்ளம் ஏற்பட்டால் மீண்டும் தடை விதிக்கப்படும் எனவும் போலீசார் எச்சரித்துள்ளனர். 

Tags:    

Similar News