30 சதவீதம் பேரை தி.மு.க. உறுப்பினர்களாக சேருங்கள் - பொதுக்குழுவில் சிறப்பு தீர்மானம்
மதுரை:
தி.மு.க. பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடியில் இன்று நடைபெற்றது.
உத்தங்குடியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில், கலைஞர் அறிவாலயம் முகப்பு தோற்றத்துடன் கூடிய பொதுக்குழு கூட்ட திடலின் முன்பாக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கம்பத்தில் தி.மு.க. கொடியை முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். பின்னர் சரியாக 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 400 பொதுக்குழு உறுப்பினர்கள், தி.மு.க.வின் அமைப்பு ரீதியிலான 23 அணிகளின் நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வின் நிர்வாக ரீதியாக பிரிக்கப்பட்ட 76 மாவட்டச் செயலாளர்கள் என 7 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் நேற்று முதலே மதுரை வந்தடைந்தனர்.
அவர்களுக்கு கூட்ட அரங்கில் தனித்தனியாக கவுண்டர்கள் அமைக்கப்பட்டு அங்கு பொதுக்குழுவில் பங்கேற்பதற்கான படிவம் வழங்கப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட நிர்வாகிகள் பூர்த்தி செய்து கொடுத்து மினிட் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். தொடர்ந்து வழங்கப்பட்ட அனுமதி கடிதம் மற்றும் பேட்ஜூடன் 8 மணி முதலே தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அமர்ந்தனர்.
பொதுக்குழு கூட்டம் நடைபெறும் மேடை கலைஞர் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டு நவீன டிஜிட்டல் வடிவில் கலை நுணுக்கங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு 11 பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. பல்வேறு மலர் அலங்காரத்துடன் கூடிய மேடைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்ததும், ஏற்கனவே வந்திருந்தவர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்து வணக்கம் தெரிவித்தார்.
பின்னர் மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் ஆர்.எஸ்.பாரதி தொடக்கவுரையாற்றினார். மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி வரவேற்றார். இதையடுத்து இரங்கல் தீர்மானத்தை டி.கே.எஸ்.இளங்கோவன் வாசித்தார்.
இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இங்கிலாந்து ராணி எலிசபெத், போப்பாண்டவர் பிரான்சிஸ், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜஸ்வந்த் சிங், ராம்விலாஸ் பஸ்வான், அஜித்சிங், மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் என்.சங்கரய்யா, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்தூரி ரெங்கன், இ.வி.கே.எஸ்.இளங்கோவன், கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, தா.பாண்டியன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார், குமரி அனந்தன், புற்றுநோய் மருத்துவர் சாந்தா, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், விவேக், அவ்வை நடராஜன், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன்அ.மா.சாமி, முரசொலி செல்வம், முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உள்ளிட்ட மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தி.மு.க. பொதுக்குழுவில் மொத்தம் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-
'எல்லாருக்கும் எல்லாம்' எனும் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒருவராவது ஏதேனும் ஒரு திட்டத்தில் பயனாளியாக உள்ளனர். இத்தகைய நலத்திட்டங்களும், மாநிலத்தின் வளர்ச்சியும், தொடர்ந்திடவும், மாநில உரிமைக்கான போராட்டங்களை உறுதியுடன் முன்னெடுக்கவும், நமது மண், மொழி, மானம் காத்திடவும் தமிழ்நாட்டின் அனைத்து குடும்பங்களும் ஒரு குடையின் கீழ் ஒன்றாய் இணைத்து, வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. துளியும் சமர சமின்றி நெஞ்சுரத்தோடு தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடும் பொருட்டு "ஓரணியில் தமிழ் நாடு" என உறுப்பினர் சேர்க்கையை கழகம் முன்னெடுக்க வேண்டும் என இப்பொதுக் குழு தீர்மானிக்கிறது.
தி.மு.க.வின் சார்பில் ஏற்கனவே அமைக்கப்பட்டு உள்ள பூத் கமிட்டிகள் மூலம் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை கழகத்தின் உறுப்பினராக இணைத்திட இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்களையும், உரிமைப் போராட்டங்களையும் எடுத்துக் கூறி, தமிழ்நாட்டின் வாக்காளர்களை 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற முன்னெடுப்பில் இணைப்பதற்கான செயல்களை மேற்கொண்டு, அடுத்து வரும் இரண்டு மாதங்களில் மாவட்ட - பகுதி - நகர - ஒன்றிய - பேரூர் - வட்ட - கிளை கழகச் செயலாளர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை நிறைவு செய்திட வேண்டும். அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் தொடங்கி, பாக முகவர்கள் வரை கழகத்தின் அனைத்து உடன்பிறப்புகளும் இதில் முழுமூச்சாக உழைத்திட வேண்டும்.
புதிய உறுப்பினர் சேர்க்கைப் பணியை தொகுதி பார்வையாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் முழுமையாகக் கண்காணித்து வெற்றிகரமாக்கிட வேண்டும் என இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
இவ்வாறு அந்த சிறப்பு தீர்மானத்தில் கூறப்பட்டு உள்ளது.
தேர்தல் களப்பணி தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வினர் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு 200 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றியை அள்ளிக்குவித்திட களப்பணி ஆற்றுவது, ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒவ்வொரு தொகுதியிலும் மக்களை தனித்தனியாக சந்தித்து திராவிட மாடல் அரசின் 4 ஆண்டு சாதனைகளை எடுத்துக்கூறி அவர்களின் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் பெற்றுத்தருவது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.
மேலும் தி.மு.க.வின் தணிக்கைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதையடுத்து பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
தொடர்ந்து இந்திய அரசியல் மற்றும் தமிழ் நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் வகையில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
மதியம் 1 மணிக்கு கூட்டம் நிறைவடைந்தது. இதையடுத்து பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு சைவ, அசைவ உணவு பரிமாறப்பட்டது.