தமிழ்நாடு செய்திகள்

மு.க.ஸ்டாலினின் முகக்கவசம் அணிந்து தி.மு.க. மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2025-06-18 12:45 IST   |   Update On 2025-06-18 12:45:00 IST
  • கீழடி அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது.
  • அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வை தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றி வருகிறது.

மதுரை:

இந்திய வரலாற்றை கீழடியில் இருந்து தொடங்கவேண்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்த நிலையில், கீழடியில் தமிழர்களின் தொன்மை மற்றும் வரலாற்றை மறைக்கின்ற வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மத்திய அரசு தமிழர்களின் பெருமையை சொல்லுகின்ற வகையில் கீழடி அகழாய்வில் தமிழர்களின் தொன்மை, தமிழர்களின் வரலாறு, தமிழர்களின் எழுத்து வடிவம் போன்றவைகளை முதல் மூன்று கட்ட ஆய்வில் கண்டுபிடித்தது. ஆனால் மத்திய தொல்லியல் துறை இன்னும் அதனை வெளியிடாமல் வைத்திருக்கிறது.

நீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடுத்தபோது, ஆறு வார காலத்துக்குள் வெளியிடுகிறோம் என்று உறுதி அளித்து 16 மாதங்கள் கடந்தும் வெளியிடாமல் இருக்கிறது. கீழடி ஆய்வில் முதல் அறிவியல் கண்டு பிடிப்பாம் இரும்பின் தொன்மையை கீழடி அடைந்திருக்கிறது. அதன் மூலம் இரும்பு கால ஆய்வு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆய்வினை முறைப்படி அங்கீகரிக்க வேண்டிய மத்திய அரசு அங்கீகரிக்க மறுத்து காலம் தாழ்த்தி வருகிறது.

இதனை கண்டித்து தி.மு.க. மாணவரணி சார்பில் மதுரை விரகனூர் சுற்றுச்சா லையில் நாளை (18-ந்தேதி) 10 ஆயிரம் மாணவர்கள் பங்கு பெறுகின்ற வகையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மேலும் இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், எத்தனை எத்தனை தடைகள் நம் தமிழினத்துக்கு? அத்தனையையும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக எதிர்த்து போராடி அறிவியல் துணை கொண்டு நம் இனத்தின் தொன்மையை நிறுவி வருகிறோம். இருந்தும் ஏற்க மறுக்கின்றன சில மனங்கள். திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை. மதுரை விரகனூரில் தி.மு.க. மாணவரணி சார்பில் நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கூடி மத்திய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம். அவர்களை திருத்துவோம் என்று கூறியிருந்தார்.

அதன்படி மதுரையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் விரகனூர் ரிங் ரோட்டில் திரண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மாணவரணி அமைப்பாளர் ராஜீவ் காந்தி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவரும், துணைப் பொதுச் செயலாளருமான திருச்சி சிவா, தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தளபதி, தமிழரசி, மாவட்டச் செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் தி.மு.க. சார்பு அணியான இளைஞரணி, மகளிரணி என அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், கீழடி அகழாய்வில் ஈடுபட்ட தொல்லியல் துறை ஊழியர்களை இடமாற்றம் செய்தது கண்டிக்கத்தக்கது. ஒன்று முதல் பலகட்ட ஆய்வுகள் அடிப்படையில் பல்வேறு பொருட்கள் கண்டறியப்பட்டு அது காட்சிப்படுத்தப்பட்டதுடன், அருங்காட்சியகத்தையும் தி.மு.க. அரசு அமைத்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட கீழடி அகழாய்வை தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் நிறைவேற்றி வருகிறது. கீழடி அகழாய்வின் மூலம் தமிழர்கள்தான் பூர்வகுடிகள் என்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது என்றனர்.

இதில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்று முகக்கவசங்களை அணிந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

Similar News