தொகுதி மறுசீரமைப்பை எதிர்ப்பது ஏன்? - ஆங்கில நாளிதழுக்கு மு.க.ஸ்டாலின் பேட்டி
- மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத்தான் எதிர்க்கிறோம்.
- பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம்
தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கே: பாராளுமன்ற தொகுதி மறுசீரமைப்பை நீங்கள் ஏன் எதிர்க்கிறீர்கள்?
பதில்: தொகுதி மறுசீரமைப்பைத் தி.மு.க எதிர்க்கவில்லை. எதிர்வரவுள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பைத்தான் உறுதியாக எதிர்க்கிறோம்.
மக்கள்தொகைக் கட்டுப்பாடு என்பது நாட்டின் பொருளாதாரம்-மக்களின் நல்வாழ்வு-வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு 50 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது. நாட்டு நலனில் அக்கறை உள்ள மாநிலமாகத் தமிழ்நாடும் தென்மாநிலங்களும் இருந்த காரணத்தால் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம்.
மக்கள்தொகைப் பெருக்கம் என்ற நெருக்கடியை, மனிதவள ஆற்றல் என்ற சாதகமான அம்சமாக மாற்றியதில் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது. நாட்டின் நலனுக்காக ஒன்றிய அரசு முன்வைத்த ஒரு திட்டத்தைச் சிறப்பாக நிறைவேற்றிய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தண்டனையாக, அதே மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து நாடாளுமன்றத் தொகுதிகளைக் குறைப்பது என்ன நியாயம்? இந்த அளவுகோலைத் தான் எதிர்க்கிறாம்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நிறுத்த பாராளுமன்றத்தில் உங்களிடம் போது மான எம்.பி.க்கள் உள்ளதா?
பதில்: இரண்டே இரண்டு எம்.பி.க்களைக் கொண்டி ருந்த தி.மு.க.தான், இந்தி பேசாத மாநில மக்கள் விரும்புகிற வரை ஆங்கிலம் இணை அலுவல் மொழியாக நீடிக்கும் என்ற உறுதி மொழியை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களிடமிருந்து பெற்றது.
மாநிலங்களவையில் ஒற்றை எம்.பி.யாக இருந்த எங்கள் இயக்கத்தின் நிறுவனர் பேரறிஞர் அண்ணா அவர்கள், இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளுக்காகவும், அந்தந்த மாநிலங்களின் உரிமைக்காகவும் முழங்கினார். பண்பட்ட ஜனநாயக நெறிமுறைகளைப் பின்பற்றக்கூடிய அரசாங்கமும் அன்றைக்கு இருந்தது. தற்போது நியாயத்தைப் பெறுவதற்கு தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.
அந்த வகையில், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படும் அனைத்து மாநிலங்களும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
நேரடியாகப் பாதிக்கப்படாத மாநிலங்களைச் சேர்ந்த கட்சிகளின் எம்.பி.க்களும்கூட, மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவத்தைக் குறைப்பது என்பது மாநில உரிமைகளுக்கு-மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கு விடுக்கப்படும் சவால் என்பதை உணர்ந்து, இந்த முயற்சிக்கு ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன்.
கே: தொகுதி மறு சீரமைப்பு என்பது அரசியலமைப்பு ஆணை. அதை எப்படி சட்டப்படி தடுக்க முடியும்?
பதில்: நாங்கள் அதைத் தடுக்கவில்லை. நியாயமான காரணங்களை முன்வைத்து, அதனைத் தள்ளி வைக்கக் கோருகிறோம். ஏற்கெனவே இரண்டு சட்டத்திருத்தங்களுடன் தள்ளிவைக்கப்பட்டதை, மீண்டும் ஒருமுறை அதே வழியில் தள்ளிவைத்து, காலவரையறையைச் சரியாக செயல்படுத்தி, சம நியாயம் கொண்ட தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை வஞ்சிக்கக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.
கே: தொகுதி மறுசீரமைப்பு ஏற்படும் போது அதனால் பாதிக்கப்படும் மற்ற மாநிலங்களை ஒருங்கிணைக்க நீங்கள் முன்னணியில் இருந்தீர்கள். அவர்களின் பதிலில் நீங்கள் திருப்தி யடைகிறீர்களா?
பதில்:கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் மார்ச் 22 அன்று சென்னையில் கூட்டப்பட்டு 3 முதல்-அமைச்சர்கள், 2 துணை முதல்-அமைச்சர்கள், முன்னாள் முதல்-அமைச்சர் உள்பட 8 மாநிலங்களின் பங்கேற்புடன் தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருக்கிறது. இது முதல் கட்ட வெற்றி. போராட்டம் தொடரும்.
கே: பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தீர்களே பிரதமர் மோடியை தமிழக எம்.பி.க்கள் எப்போது சந்திப் பார்கள்? பிரதமரிடம் இருந்து சாதகமான பதில் வரும் என எதிர்பார்க்கிறீர்களா?
பதில்: பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருக்கிறோம். அவரும் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சராக இருந்தவர். மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை உணர்ந்தே இருப்பார். அதனால், அவரது அழைப்பை நம்பிக்கையுடன் எதிர்பார்த் திருக்கிறோம்.
கே: தமிழ்நாட்டில் நிலவும் பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பவே தொகுதி மறுவரையறை பிரச்சினையை நீங்கள் கையில் எடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறார்களே அதுபற்றி உங்கள் பதில்?
பதில்: தி.மு.க.வின் மாநில உரிமைக் குரலுக்கு நியாயமான பதில் சொல்ல முடியாதவர்கள்தான் திசை திருப்புகிறார்கள்.
ஒன்றிய அரசு வெளியிடும் புள்ளிவிவரங்கள், அறிக்கைகளின்படியே தமிழ்நாடு பல்வேறு இலக்குகளில் முன்னேறியிருக்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்கள் தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் போய்ச் சேர்ந்திருக்கிறது. மக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு வலுவாக உள்ளது. எனவே, திசை திருப்ப வேண்டிய சூழலோ அவசியமோ எங்களுக்கு கிடையாது.
1971 மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது ஏற்கெனவே இந்திய அளவில் விவாதிக்கப்பட்டதுதான். அது மேலும் 25 ஆண்டுகளுக்குத் தொடர வேண்டும் என்றுதான் வலியுறுத்துகிறோம்.
கே: தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை என்று பிரதமர் மோடி அரசு சொல்கிறதே?
பதில்: அதை பிரதமர் மோடி நாடாளுமன்றத்திலோ-நாட்டு மக்களுக்கோ ஏன் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் இது பற்றி தெளிவுபடுத்த வேண்டும் என பிரதமரிடம் கேட்டும் இதுவரை ஏன் பிரதமர் தெளிவுபடுத்தி-மக்கள் தொகையை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்களுக்கு பாதிப்பு வராது என்ற உறுதி மொழியை ஏன் அளிக்கவில்லை?
பா.ஜ.க. அரசு சொல்வதும் செய்வதும் முற்றிலும் மாறுபாடாக உள்ளது என்பதற்கு எத்தனையோ முன்னுதாரணங்கள் உண்டு. வக்பு வாரிய திருத்தச் சட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் உறுப்பினர்கள், குறிப்பாக தி.மு.க.வின் சார்பில் பங்கேற்றிருந்த உறுப்பினர்கள், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முன்வைத்த வாதங்கள், கோரிக்கைகள் அனைத்தும் புறக்கணிக்கப் பட்டு, பா.ஜ.க. விரும்பியபடி அந்த சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது. நியாயமற்ற அரசாக பா.ஜ.க செயல் படுவதால்தான் தொகுதி மறுசீரமைப்பு குறித்த அதன் தெளிவற்ற விளக்கம் ஏற்கக்கூடியதாக இல்லை.