தமிழ்நாடு செய்திகள்

குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்

Published On 2025-11-02 13:56 IST   |   Update On 2025-11-02 13:56:00 IST
  • மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
  • மண்டல குப்பை சேமிப்பு கிடங்குகளில் இந்த பொருட்கள் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை கிளீன் தமிழ்நாடு கம்பெனி லிமிடெட் மூலம் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்து உள்ளது.

மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கே இந்த பொருட்கள் விற்பனை செய்யப்படும். வழக்கமாக இந்த பொருட்கள் மத்திய அரசின் நிறுவனம் மூலம் ஆன்லைன் முறையில் ஏலம் விடப்படும். ஆனால் இந்த முறையில் ஏலம் விடுவதற்கு 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. இதையடுத்து பழைய நடைமுறையை மாற்றியமைத்து இந்த புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

மண்டல குப்பை சேமிப்பு கிடங்குகளில் இந்த பொருட்கள் நீண்ட நாட்களாக தேங்கி கிடப்பதால் சுகாதார அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னையில் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் உள்ள பொருட்கள் ஆன்லைன் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்வதற்கு தாமதம் ஆவதால் இடப்பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே புதிய முறை அமல்படுத்தப்பட உள்ளது.

பழைய பொருட்களை வாங்குபவர்கள் நேரடியாக தொடர்பு கொள்ள முடிவதால் மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களை வேகமாக அப்புறப்படுத்த முடியும். பல மாதங்களாக தேங்கி கிடக்கும் பொருட்களை அகற்றுவதே இதன் நோக்கம்.

இந்த புதிய முறையில் பிளாஸ்டிக் பொருட்கள், காகிதங்கள், கண்ணாடி பொருட்கள், உலோகங்குள், அட்டைகள், மரம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவை தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

இதில் வெளிப்படை தன்மையை உறுதி செய்வதற்காக அனைத்து பரிவரித்தனைகளும் தூய்மை மிஷன் டிஜிட்டல் தளத்தில் பதிவு செய்யப்படும்.

இந்த மறுசுழற்சி பயன்பாட்டு பொருட்களை பொருத்தவரை செல்போன் ரூ.80-க்கும், லேப்டாக் ரூ.500-க்கும், பிரிட்ஜ் ரூ.800-க்கும், வாஷிங்மிஷின் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படும். இந்த நடைமுறையானது இனி வரும் வாரங்களில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News