தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் நாளை மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் பிரமாண்ட ரோடு ஷோ...

Published On 2025-05-30 07:59 IST   |   Update On 2025-05-30 07:59:00 IST
  • பிரமாண்ட பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார்.
  • தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கட்அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன.

மதுரை:

மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடக்கிறது. இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி தலைமையில் நடந்து வருகிறது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

பொதுக்குழு நடைபெறும் பந்தலில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடக்கிறது. குளு, குளு ஏ.சி.வசதியுடன் இருக்கைகளும், வண்ண விளக்குகளுடன் அமைகிறது. முக்கிய நிர்வாகிகள் அமரும் மேடை, முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் வர தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அவர்களது பெயர்கள் பார்த்து பதிவு செய்து எளிதில் அனுமதி பெற்று பொதுக்குழு அரங்கிற்குள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் பல்வேறு வகையான உணவுகள் சுமார் 3 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் பிரமாண்ட கட்-அவுட்டுகளும் வைக்கப்பட உள்ளது.

அரங்கின் முன்பு 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அந்த பகுதியில் பசுமையான புல்வெளிகள், பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீரூற்றும் அமைக்கப்படுகிறது.

இந்த பிரமாண்ட பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார். அதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலையின் இருபுறங்களில் தி.மு.க. கொடி அமைக்கப்படுகிறது. மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பிரமாண்டமான ரோடு ஷோ சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது.

தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கட்அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன. இதையொட்டி ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார். பின்னர் புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் முதலமைச்சர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News