மருத்துவ துறையில் 172 பேருக்கு பணி நியமனம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
- புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தைச் செயல்படுத்த 28.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
- 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணை வழங்கி வாழ்த்தினார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 59 சித்தா உதவி மருத்துவ அலுவலர்கள், 2 ஆயுர்வேதா உதவி மருத்துவ அலுவலர்கள், 1 யுனானி உதவி மருத்துவ அலுவலர், 53 யோகா மற்றும் இயற்கை மருத்துவ உதவி மருத்துவ அலுவலர்கள், விரிவுரையாளர்கள் (நிலை-II) மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 57 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 172 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
மேலும் புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தைச் செயல்படுத்த 28.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்படி திருத்திய கொள்கை முடிவானது அரசாணை வெளியிடப்பட்ட 12.6.2025 நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும். இந்த புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தின்படி 2011-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 8,533 காவலர்களில், 12.6.2025 அன்று 3 ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக பணிநிறைவு செய்து பணியாற்றுபவர்கள் 1.7.2025 முதல் உடனடி பயனடைந்து தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு பெறுவர்.
மேலும், 2026-ம் ஆண்டில், முதல் நிலை காவலர்களாக பணியாற்றும் 11,488 காவலர்கள் இப்புதிய பதவி நிலை உயர்வின்படி தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு பெற உள்ளனர். இந்த புதிய காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் ஆணையினை செயல்படுத்திடும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றையதினம் ஒவ்வொரு மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் ஒவ்வொரு காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் இருந்து 11 முதல் நிலை காவலர்களுக்கும், என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணை வழங்கி வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், காவல் துறை இயக்குனர் வெங்கட்ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.