தமிழ்நாடு செய்திகள்

மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2025-10-30 08:29 IST   |   Update On 2025-10-30 08:29:00 IST
  • துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
  • தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார்.

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாக இன்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

இதற்காக நேற்று மாலை மதுரை வந்த துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இரவில் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

இதேபோல் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் மதுரை வந்தார்.

நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் கலந்துகொண்டார். பின்னர் இரவு மதுரையில் அழகர்கோவில் சாலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் தங்கினார்.

இந்நிலையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு தங்கிருப்பதை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக அவரை நேரில் சந்தித்து உரையாடினார். அப்போது துணை ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசை முதலமைச்சர் வழங்கினார்.

அவருடன் தி.மு.க. எம்.பி. கனிமொழி, அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி உடன் இருந்தனர்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்! என்று தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News