தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் பகலில் வெயில் வாட்டும், இரவில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வாளர் கணிப்பு

Published On 2025-06-21 11:05 IST   |   Update On 2025-06-21 11:05:00 IST
  • தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.
  • வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

சென்னை:

தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. சென்னையிலும் வெயில் அதிகரித்துள்ள நிலையில் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்திரன் கூறியிருப்பதாவது:-

மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரியும் சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, மதுரை நகரம் ஆகிய இடங்களில் 103 டிகிரியும் வெயில் பதிவாகி உள்ளது.

தூத்துக்குடி , திருத்தணி, திருச்சி ஆகிய இடங்களில் 103 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கம் இருந்து உள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி துரைப்பாக்கம், பள்ளிக்கரணையில் தலா 5 செ.மீ, கண்ணகி நகர், மேடவாக்கம், மடிப்பாக்கம், மணலியில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வலுவான மேற்கு காற்றின் ஊடுருவல் காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் நேர வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக கடல் காற்று உள் நுழைவதில் ஏற்படும் தடை மற்றும் தாமதம் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகரித்து காணப்படுகிறது.

தமிழகத்தில் பகல் நேரத்தில் வெப்பமான சூழலே நிலவும், கடலோர மாவட்டங்களில் பகல்நேர வெப்ப நிலை 100 டிகிரி அளவுக்கு பதிவாக வாய்ப்பு உள்ளது.

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்றும் நாளையும் பரவலாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News