தற்காலிக கொடிக்கம்பங்களுக்கு அனுமதி கட்டாயம் - சென்னை மாநகராட்சி
- அரசியல் கட்சிகளின் பிரசாரத்தின்போது தற்காலிக கொடிகள் கட்ட அனுமதி பெற வேண்டும்.
- அனுமதியின்றி நடப்படும் தற்காலிக கொடிக்கம்பம் எந்த முன்னறிவிப்பின்றி அகற்றப்படும்.
தமிழகம் முழுவதும் பொது இடங்கள், மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், உள்ளாட்சிக்கு சொந்தமான இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், சாதி, மத அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கொடிக் கம்பங்களை 2025 ஏப்ரல் 28க்குள் அகற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை 2025 ஜனவரியில் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில், கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு குழுக்கள் அமைத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அதேபோல், அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்காக கொடிக்கம்பங்கள் அமைக்கும் போது, சாலையில் தார்கள் மீதும், சாலை நடுவில் உள்ள செண்டர் மீடியன் பகுதிகளில் கொடிக்கம்பங்கள் அமைக்க கூடாது. மூன்று நாட்களுக்கு மேல் கொடிக்கம்பங்களை வைத்திருக்க கூடாது என்பன உள்ளிட்ட வழிகாட்டு விதிமுறைகளும் வகுக்கப்பட்டன.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக கொடிக்கம்பங்கள் அமைக்க அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.
* அரசியல் கட்சிகளின் பிரசாரத்தின்போது தற்காலிக கொடிகள் கட்ட அனுமதி பெற வேண்டும்.
* தேர்தல் பிரசாரம், தர்ணா, பண்டிகை உள்ளிட்ட நிகழ்வுக்கு கொடிக்கம்பம், பேனர் வைக்க அனுமதி கட்டாயம் பெற வேண்டும்.
* அனுமதியின்றி நடப்படும் தற்காலிக கொடிக்கம்பம் எந்த முன்னறிவிப்பின்றி அகற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.