திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
- வெடிகுண்டு மிரட்டல் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
- சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.
திருச்சி:
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்ற பெயரில் இருந்து மின்னஞ்சல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் நான்கு தளங்களிலும் ஒவ்வொரு அலுவலக அறையாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. திருச்சிக்கு நாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை தர உள்ள நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது காவல் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, வெடிகுண்டு மிரட்டல் திருச்சி கலெக்டர் அலுவலக மெயிலுக்கு வந்தாலும், அதில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. ஆகவே மனநிலை பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ள நபர் மிரட்டல் விடுத்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இந்த வெடிகுண்டு சோதனையால் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு காணப்பட்டது. இந்த சோதனையால் அலுவலகப் பணிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டது.