உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்- மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை
- சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
- வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை ஐகோர்ட்டில் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்டகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. எனவே வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள், பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை ஐகோர்ட்டிற்கு வந்து செல்கிறார்கள். இதனால் ஐகோர்ட்டு வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில் இ-மெயில் மூலமாக மதுரை ஐகோர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஐகோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். முதல் கட்டமாக ஐகோர்ட்டின் நுழைவாயில் மூடப்பட்டது. உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்லாதவாறும், வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழையாதவாறும் போலீசார் தடுப்பு காவலில் ஈடுபட்டனர்.
பின்னர் ஐகோர்ட்டு வளாகத்தில் வெடிகுண்டு சோதனை தொடங்கியது. இந்த சோதனை முழுமையாக முடிந்த பின்னரே கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டு வளாகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் ஐகோர்ட்டு வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதற்கிடையில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனால் ஐகோர்ட்டு வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 26-ந்தேதி இதே போல ஐகோர்ட்டு பதிவாளர் இ-மெயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததும், சோதனைக்கு பின்பு புரளி என்பதும் தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.