தமிழ்நாடு செய்திகள்

போடியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு- இரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்து தெருவில் தூங்கிய மக்கள்

Published On 2025-06-24 10:23 IST   |   Update On 2025-06-24 10:23:00 IST
  • ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
  • மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

மேலசொக்கநாதபுரம்:

தேனி மாவட்டம் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று காலை முதல் மின்சார விநியோகம் முறையாக இல்லாமல் ½ மணி நேரத்திற்கு ஒரு முறை மின்வெட்டு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் இரவு சுமார் 11 மணியளவில் மின்வெட்டு ஏற்பட்ட நிலையில் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தேனி துணை மின் நிலையத்தில் போடி விநியோகப் பகுதியில் ஏற்பட்ட பழுது காரணமாக சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டது.

இதனால் போடி சுற்றுப்பகுதி மக்கள் மட்டுமின்றி அணைக்கரைப்பட்டி, மீனாட்சிபுரம், சிலமலை, சில்ல மரத்துப்பட்டி, ராசிங்கபுரம், கரட்டுப்பட்டி, சூலபுரம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.

மேலும் போடியை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை கிராமங்களான போடி மெட்டு, கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன், சென்ட்ரல், பிச்சாங்கரை போன்ற பகுதிகளிலும் சுமார் 3 ½ மணி நேரத்திற்கு மேல் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புழுக்கம் காரணமாக சாலையில் படுக்கை விரித்து படுத்து உறங்கினர்.

மேலும் வீட்டு வாசலில் பொது மக்கள் கொசுக்கடி காரணமாக மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

தேனி பகுதியில் மில் வேலைக்கு சென்று இரவு பணி முடித்து திரும்பி வரும் பெண்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக அவர்களுடைய தாய்மார்கள் இருளில் காத்திருந்தனர்.

போடி அரசு மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதை தொடர்ந்து அங்குள்ள ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின்சாரம் விநியோகம் நடைபெற்றது. ஆனால் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டரில் டீசல் தீர்ந்து நின்று விட்டது. இதனால் நோயாளிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் ஏற்பட்ட மின்தடை காரணமாக வேலைக்கு செல்பவர்கள் குழந்தைகள் தூக்கம் பாதிக்கப்பட்டதால் காலையில் வேலைக்கு செல்வதிலும் பள்ளிக்கு செல்வதிலும் மிகுந்த சிரமம் உள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

இரவு 11 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவு 2½ மணியளவில் சரி செய்யப்பட்டது.

கடந்த சில வாரங்களாகவே இதுபோன்று மின்தடை ஏற்பட்டுவரும் நிலையில் உரிய பராமரிப்பு மேற்கொண்டு மின்விநியோகத்தை சீராக வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News