தென்காசி அருகே பைக் - லாரி மோதி விபத்து: 3 பேர் பலி
- பூப்பறித்து விட்டு 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
- சம்பவ இடத்திலேயே அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாத புரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு (வயது 50). இவர் சுரண்டை பகுதியில் மெட்டல் பாலீஷ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா (40). இவர் நர்சிங் முடித்து விட்டு மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார்.
மேலும் சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சுரண்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் ரெட்டைகுளம் பகுதியில் இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தோட்டத்தில் தற்போது பூ பயிரிடப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை அருள் செல்வபிரபு தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையான அதே பகுதியை சேர்ந்த பிளஸ்சி (35) ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அங்கு பூப்பறித்து விட்டு 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த காய்கறி லாரியின் முன்பக்க பகுதி மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் 3 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது மோதிய லாரியின் பின்பக்க டயர் 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேர் உடலையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக 3 பேரும் விபத்தில் பலியான செய்தியை கேட்டு அவர்களது உறவினர்கள் அங்கு சென்று உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.