தமிழ்நாடு செய்திகள்

உறுப்பினர் சேர்க்கைக்கு OTP பெற தடை: அவசர வழக்காக விசாரிக்க தி.மு.க. சார்பில் மேல்முறையீடு

Published On 2025-07-22 12:56 IST   |   Update On 2025-07-22 12:56:00 IST
  • தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம்.
  • தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை ஐகோர்ட்டில் நேற்று தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் மானாமதுரை தொகுதி ஒருங்கிணைப்பாளர் வினோத் சார்பில் வக்கீல் லஜபதிராய் என்பவரும், தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் வில்சன் ஆகியோர் நீதிபதிகள் முன்பாக ஆஜராகி, பொதுமக்களிடம் தி.மு.க.வினர் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற பேரில் ஆதார் விபரங்கள் பெறப்படவில்லை.

அ.தி.மு.க. தரப்பில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓ.டி.பி. பெறுவதாக தவறான தகவலை இந்த கோர்ட்டில் தெரிவித்து தடை உத்தரவு பெற்று இருக்கின்றனர். தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையிலேயே உறுப்பினர்களை சேர்க்கிறோம்.

உறுப்பினர் சேர்க்கை சம்மதம் பெறுவதற்காகவே ஓ.டி.பி. பெறப்பட்டது. வேறு எந்த ஆவணத்தையும் யாரிடமும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து, வழக்கு தாக்கல் செய்துள்ளனர். தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இது சம்பந்தமான வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையிட்டனர்.

அதற்கு நீதிபதிகள், நேற்று விசாரிக்கப்பட்ட பிரதான வழக்கில் இடையீட்டு மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுக்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News