தமிழ்நாடு செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி எதிரொலி: திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் செல்வோர் கவனத்திற்கு...

Published On 2025-09-05 13:11 IST   |   Update On 2025-09-05 13:11:00 IST
  • 1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன.
  • தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 1 வது பிளாட்பாரத்தில் இருந்து 11-வது பிளாட்பாரம் வரை பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற உள்ளது. எழும்பூர் பாரம்பரிய ரெயில் நிலைய கட்டிடத்தை தவிர மற்ற இடங்கள் சீரமைக்கப்படுகிறது.

விமான நிலையத்தை போல ரெயில் நிலையம் புதிதாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்காக பல்வேறு கட்டமாக பணிகள் நடைபெற்று வருகின்றன.

1,2,3,4-வது பிளாட்பாரங்களில் அடிப்படை பணிகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது 7,8,9 ஆகிய பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் செய்வதற்காக அங்கிருந்து புறப்படக்கூடிய ரெயில்களை மாற்றுவதற்கு ரெயில்வே துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.

ரெயில்வே துறையின் பல்வேறு தொழில்நுட்ப பிரிவுகளை சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இந்த மூன்று பிளாட்பாரங்களில் சீரமைப்பு பணிகளை தொடங்க இருப்பதால் தாம்பரத்தில் இருந்து ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 5 எக்ஸ்பிரஸ் ரெயில்களை தாம்பரத்தில் இருந்து இயக்கவும் ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து இயக்கவும் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 11-ந்தேதி வரை இரண்டு மாதங்கள் தாம்பரம் ரெயில் நிலையத்திலிருந்து 5 முக்கிய ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

எழும்பூர்-திருச்சி இடையே இயக்கப்படும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 10-ந் தேதி முதல் நவம்பர் 9-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

எழும்பூர்-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் 2 மாதம் அங்கிருந்து இயக்கப்படும்.

எழும்பூரில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் ரெயில் எண் 22675 எக்ஸ்பிரஸ் வருகிற 11-ந்தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை தாம்பரத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் செல்லக்கூடிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்களும் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்.

இதே போல எழும்பூரில் இருந்து மும்பைக்கு செல்லக்கூடிய எண் 22158 எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 11-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு செல்லும்.

ஏற்கனவே கொல்லம் எக்ஸ்பிரஸ், குருவாயூர், மன்னார்குடி எக்ஸ்பிரஸ்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேலும் 6 ரெயில்கள் எழும்பூரில் இருந்து தாம்பரம் மற்றும் கடற்கரை நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் ரெயில் இயக்க மாற்றத்தை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு பயணத்தை தொடரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tags:    

Similar News