தமிழ்நாடு செய்திகள்
null

சனாதன தர்மம் மீதான திமுக அரசின் விரோதம் - திருப்பரங்குன்ற விவகாரத்தில் அண்ணாமலை கோபம்

Published On 2025-12-03 23:52 IST   |   Update On 2025-12-03 23:54:00 IST
  • தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.
  • இந்தச் செயல் நமது மக்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவில் மதுரை திருப்பரங்குன்றத்தில் வழக்கப்படி உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால் திருப்பரங்குன்றம் மலை மீது, வழக்கத்திற்கு மாறாக சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் 15 மீ தொலைவில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

ஆனால் உத்தரவுப்படி தக்ரா அருகே ஏற்றாமல் எப்போதும்போல உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டது.

இதனால் உயர் நீதிமன்றத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எஃப் வீரர்களை கூட்டிக்கொண்டு மனுதாரர் தர்காவுக்கு அருகில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார். ஆனால் போலீசார் மலை ஏற அனுமதி மறுக்கவே சிஐஎஸ்எஃப் வீரர்கள் திரும்பிச் சென்றனர்.

இதனிடையே மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாததைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. அசம்பாவிதங்களை தவிர்க்க அப்பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மலையேற முயற்சித்து போலீசாருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளுமுள்ளலில் ஈடுபட்டனர். மேலும் தடுப்புகளை தூக்கி எறிந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் போலீசார் ஒருவர் காயமும் அடைந்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் சனாதன தர்மத்தின் மீதான விரோதம் வெளிப்பட்டுள்ளது.

இந்து பக்தர்களுக்கு சேவை செய்ய வேண்டிய இந்து சமய அறநிலையத் துறை, திருப்பரங்குன்றம் மலையில் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கும் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்தச் செயல் நமது மக்களின் நம்பிக்கையின் மையத்தையே தாக்குகிறது.

இன்று, நூற்றுக்கணக்கான காவல்துறையினரை குவித்து, பக்தர்கள் மதச் சடங்குகளைச் செய்வதைத் தடுத்து நிறுத்துவதன் மூலம், திமுக ஆட்சி அதன் திருப்திப்படுத்தும் அரசியலின் முழு அளவையும் அம்பலப்படுத்தியுள்ளது.

சனாதன தர்மம் ஏன் மீண்டும் மீண்டும் தனிமைப்படுத்தப்படுகிறது என்பதற்கு திமுக பதிலளிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் இந்த அரசுக்கு எந்த அர்த்தமும் இல்லையா?" என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News