திருச்செந்தூர் கும்பாபிஷேகத்திற்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை- அமைச்சர் சேகர் பாபு
- விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
- 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
தமிழ் கடவுளான முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாகவும், கடற்கரையோரம் அமைந்துள்ள கோவில்களில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விளங்குகிறது.
இந்த கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதன் பிறகு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது.
இன்று அதிகாலை 12-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
அதிகாலை 4 மணி அளவில் 12-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து காலை 6.22 மணிக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பச்சை கொடி காட்டவும் 9 கலசங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து கலசங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலுக்கு சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா என்பது பக்தர்கள் மாநாடு, பா.ஜ.க.வினரின் மாநாடு அல்ல.
இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது." என்றார்.