தமிழ்நாடு செய்திகள்

அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான்: விஜயை மறைமுகமாக சாடிய உதயநிதி ஸ்டாலின்

Published On 2025-11-16 21:41 IST   |   Update On 2025-11-16 21:41:00 IST
  • அறிவு திருவிழாவில் அவர்கள் விமர்சித்து பேசிவிட்டோம் என்ற கோபம் வேற.
  • எப்படி போலீஸ் பெயரை கேட்டால் திருடனுக்கு பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி

தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் "அறிவுத் திருவிழா என்ற பெயரில் பரண்களில் கிடக்கும் பழைய ஓலைகளைத் தூசு தட்டித் தோரணம் கட்டப் பார்க்கும் அவர்களின் பழைய மற்றும் புதிய கொள்கை உறுதி பற்றிக் கொஞ்சமே கொஞ்சம் பார்க்கலாமா?

யாரை ஏளனமாகப் பரிகாசம் செய்தார்களோ அவர்களிடமே பதவிக்காகப் பம்மினரே, அப்போது எங்கே போயிற்று மானம்?

ஆட்சியில் இல்லாதபோது 'தமிழ் தமிழ்' என்பதும், 'தமிழர் தமிழர்' என்பதும், ஆட்சிக்கு வந்ததும் அதிகாரப் பதவிகளுக்குள் அடக்கமாக அமர்ந்துகொண்டு, அரசியல் சாசனக் கட்டுப்பாடுகள் மீது பழி போட்டுப் பதவி சுகம் காணும்போது எங்கே போனது மண், மானம் மற்றும் மொழி மீதான கொள்கைப் பாசம்?

சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்ற அர்த்தமற்ற வாதத்தை வைத்துத் தப்பிக்கும்போது, எங்கே போனது அவர்களின் சமூக நீதிக் கொள்கை?

அறிவுத் திருவிழா என்று பெயர் வைத்துவிட்டு, முழுக்க முழுக்க, தமிழக வெற்றிக் கழகத்தை மட்டுமே மறைமுகமாகத் திட்டும் திருவிழாவாக அதை மாற்றியதிலேயே அது அறிவுத் திருவிழாவாக இல்லாமல் அவதூறுத் திருவிழாவாகத்தானே மாறியது?

பெரியார், அண்ணா கொள்கைகளை மறந்துவிட்ட அவர்கள், மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கைகளோடு களம் இறங்கி, யாருக்கும் எதற்கும் வளையாமல் வலம் வரும் தமிழக வெற்றிக் கழகத்தைப் பார்த்து, கொள்கையற்றவர்கள் என்று கூறுவதற்கான காரணம் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலும் குமைச்சலுமன்றி வேறென்ன?

53 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும், ஆட்சி அதிகாரத்தைப் பகல் கனவாக்கப் போகும் ஒரு 'பக்கா மாஸ்' கட்சி வந்திருப்பதைக் கண்டு நாள்தோறும் நாக்குழறி, உளறும் அவர்களுக்கு நாம் சொல்வதெல்லாம் என்ன தெரியுமா?

பவளவிழா பாப்பா - நீ

பாசாங்கு காட்டல் ஆகாது பாப்பா

நீ நல்லவர்போல நடிப்பதைப் பார்த்து

நாடே சிரிக்கிறது பாப்பா.

சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில்கூட யாரை விமர்சிக்க வேண்டுமோ அவர்களை விமர்சிப்பதைவிட, நம்மைத் திட்டவைத்து அகமகிழ்ந்ததே நடந்தது.

எல்லா வகையிலும் கபட நாடகம் ஆடும் அவர்களது அவல ஆட்சியின் லட்சணங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். மேலும், மக்கள் சக்தியின் மதிப்பை, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களுடன் மக்களாக இணைந்து நின்று, இந்த அவதூறு மன்னர்கள் உணரச் செய்வோம்" என திமுக-வை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறிவு திருவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது "எப்படி நீங்கள் அறிவு திருவிழா நடத்தலாம். யாரைக் கேட்டு நடத்துறிங்க. எதுக்காக நடத்துறிங்க. அறிவு இருக்கிறவன் திருவிழா நடத்துறான். அறிவு திருவிழாவில் அவர்கள் விமர்சித்து பேசிவிட்டோம் என்ற கோபம் வேற. எப்படி போலீஸ் பெயரை கேட்டால், திருடனுக்கு பயம் வருமோ, அதேபோல் அறிவு என்ற வார்த்தையை கேட்டாலே அவர்களுக்கு அலர்ஜி" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

Tags:    

Similar News