தமிழ்நாடு செய்திகள்

சிங்கப்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் வந்த ஆந்திரா பெண் கைது

Published On 2024-12-05 13:46 IST   |   Update On 2024-12-05 13:46:00 IST
  • கோவைக்கு வந்த ஒரு பெண்ணின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
  • தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோவை:

கோவை விமான நிலையத்துக்கு நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் வந்திறங்கியது. தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை நடத்தினார்கள்.

அப்போது கோவைக்கு வந்த ஒரு பெண்ணின் ஆவணங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் அவர் ஆந்திர மாநிலம் கண்டசாலா பகுதியைச் சேர்ந்த கனகதுர்கா (வயது 36) என்பதும், அவர் போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் பயணம் செய்தது தெரிய வந்தது. மேலும் வேறு ஒருவரின் முகவரியில் புகைப்படத்தை ஒட்டி போலி பாஸ்போர்ட் தயாரித்து சிங்கப்பூருக்கு சென்று வீட்டு வேலை பார்த்த விவரமும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவரை விமான நிலைய குடியேற்றப்பிரிவு அதிகாரி கிருஷ்ணஸ்ரீ, பீளமேடு போலீசில் ஒப்படைத்தார். இன்ஸ்பெக்டர் கந்தசாமி நடத்திய விசாரணையில் கனகதுர்காவிற்கு போலி பாஸ்போர்ட் எடுக்க, நாகேஸ்வரராவ் என்பவர் உதவி செய்தது தெரிய வந்தது.

தொடர்ந்து போலி பாஸ்போர்ட் பயன்படுத்தி பயணம் மேற்கொண்டதாக கனகதுர்காவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நாகேஸ்வரராவை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News