பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு ஊழியர்கள் 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்- அன்புமணி குற்றச்சாட்டு
- 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
- தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும்.
ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.வை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.