பா.ம.க. பொறுப்பாளர்களுடன் 2-வது நாளாக இன்று ஆலோசனை நடத்துகிறார் அன்புமணி
- நேற்றைய கூட்டத்தில் 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
- மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.
இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், மே 30-ந்தேதி முதல் (அதாவது நேற்று முதல்) 3 நாட்கள் நடக்கும் என்று அறிவித்தார்.
அதன்படி, சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், டாக்டர் அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இன்று 2-வது நாளாக பா.ம.க. பொறுப்பாளர்களை சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். காலையில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், திருச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.