தமிழ்நாடு செய்திகள்

'அன்புக்கரங்கள்' திட்டம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Published On 2025-09-15 11:10 IST   |   Update On 2025-09-15 11:10:00 IST
  • பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
  • உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கினார்.

சென்னை:

ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது.

மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் "தாயுமானவர்" திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், "அன்புக்கரங்கள்" திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கினார். காணொலி வாயிலாகவும் மாவட்டங்களில் இதை தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் இதில் பங்கேற்றார்.

மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ-மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News