செங்கோட்டையன் சந்திப்பு குறித்து அமித் ஷா என்னிடம் எதுவும் கூறவில்லை: தம்பிதுரை எம்.பி.
- அமித் ஷாவை சந்தித்து பேசியதை உறுதிப்படுத்தினார் செங்கோட்டையன்.
- இன்றைய அரசியல் சூழல் குறித்து பேசியதாக தெரிவித்தார்.
அதிமுக-வில் இருந்து நீக்கயவர்களை ஒன்றிணைத்து, வலிமையோடு செயல்பட வேண்டும் என அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் கருத்து தெரிவித்தார். ஏற்கனவே, கட்சி செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஹரித்துவார் செல்வதாக கூறி செங்கோட்டையன் டெல்லி புறப்பட்டார். டெல்லி சென்ற அவர் அமித் ஷாவை சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், நேரம் கிடைத்ததால் அமித் ஷாவை சந்தித்து பேசினேன். அப்போது இன்றைய அரசியல் சூழல் குறித்து பேசினேன். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்தோடு, அனைவரும் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு என்னுடைய கருத்துக்களை கூறினேன்" என்றார்.
இந்த நிலையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை செய்தியாளர்கனை இன்று சந்தித்தேன். அப்போது செங்கோட்டையன் அமித் ஷாவை சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு தம்பிதுரை, "இன்று நாடாளுமன்றத்தில் அமித் ஷாவை சந்தித்தேன். அப்போது செங்கோட்டையன் உடனான சந்திப்பு குறித்து என்னிடம் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை. நானும் அவரிடம் கேட்கவில்லை. அது தேவையில்லை. அவர்கள் அழைத்தார்களா? இல்லையா? என்பது எங்களுக்கு தெரியாது" எனப் பதில் அளித்தார்.