திண்டுக்கல் அருகே எரியோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு தீ வைப்பு
- கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல்-கரூர் சாலையில் எரியோடு அ.தி.மு.க. கட்சி அலுவலகம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் முன்பாக தென்னை ஓலைகளால் வேயப்பட்ட பந்தல் போடப்பட்டிருந்தது. இன்று அதிகாலை 3.30 மணி அளவில் இங்கு வந்த மர்ம நபர்கள் பந்தலில் தீ வைத்து சென்று விட்டனர்.
தீ கொளுந்து விட்டு எரிவதை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். இருந்தபோதும் அங்கிருந்த கொட்டகை, டேபிள், சேர் மற்றும் பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இது குறித்து எரியோடு அ.தி.மு.க. செயலாளர் அறிவாளி எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு ஏராளமான அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். இதன் அருகே அரசு பள்ளி, போலீஸ் நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த இடத்தில் நடந்த தீ விபத்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் உதவியுடன் தீ வைத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.