தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் ரஜினி

Published On 2025-07-21 17:04 IST   |   Update On 2025-07-21 17:04:00 IST
  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டு மருத்துமனையில் அனுமதி.
  • தொலைபேசி மூலம் பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அங்கு அவரது முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா தி.மு.க.வில் இணைந்தார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சந்தித்து பேசினார். சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர்.

அதன்பிறகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்க புறப்பட்டு சென்றார். அவரது வாகன அணிவகுப்பு புறப்பட்ட சிறிது நேரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது காரை அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாகன அணிவகுப்பு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது. அங்கு அவருக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து அப்பல்லோ மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொண்டபோது லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதனால் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீரென அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற தகவல் அறிந்ததும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி மருத்துவமனைக்கு சென்றனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார். தொலைபேசி மூலம் பேசிய ரஜினிகாந்த், முதலமைச்சர் விரைவில் நலமுடன் வீடு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News