சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைத்தபோது மயங்கி விழுந்து ஒருவர் பலி
- போலீசார் கார்த்திகேயனை வீட்டின் வெளியே அழைத்து குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது.
- அபிராமபுரம் போலீசார் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
சென்னை, அபிராமபுரம், கே.வி.பி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது55). இவர் மீது தாழம்பூர் போலீஸ்நிலையத்தில் நிலமோசடி குற்றச்சாட்டு உள்ளதாக தெரிகிறது.
இதுதொடர்பாக சம்மன் கொடுத்து விசாரணைக்கு அழைப்பதற்காக இன்று அதிகாலை 5 மணியளவில் தாழம்பூர் போலீசார் கார்த்திகேயனின் வீட்டுக்கு வந்தனர். பின்னர் போலீசார் கார்த்திகேயனை வீட்டின் வெளியே அழைத்து குற்றச்சாட்டு தொடர்பாக விசாரித்ததாக தெரிகிறது.
அப்போது திடீரென கார்த்திகேயன் வீட்டு வாசலில் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் கார்த்திகேயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்மன் அளிக்க வந்த போலீசார் கார்த்திகேயனை தாக்கியதால் அவர் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக குற்றம்சாட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
அபிராமபுரம் போலீசார் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.