தமிழ்நாடு செய்திகள்

கைதானவர்களை படத்தில் காணலாம்.

14 வயது சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தாய் உள்பட 3 பேர் கைது

Published On 2025-03-06 10:39 IST   |   Update On 2025-03-06 11:49:00 IST
  • திருமணத்திற்கு சிறுமியின் தாயும் உதவியாக இருந்துள்ளார்.
  • உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.

தளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொட்டமஞ்சு மலை கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி, இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை என்ற மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (29) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டாய திருமணம் நடந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு சிறுமியின் தாயும் உதவியாக இருந்துள்ளார். பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை எனக்கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் (38) ஆகியோர் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.

சிறுமியை அவர்கள் தூக்கி செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்று இளம் வயதுள்ள சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் இந்த திருமணத்திற்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

Similar News