குண்டாறு அணை நிரம்பி வழியும் காட்சி
நெல்லையில் இந்த மாதம் 20 சதவீதம் மழை பொழிவு அதிகம்- அடவிநயினார் அணை நிரம்புகிறது
- குளங்களை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
- தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கழுகுமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு எஸ்டேட் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளுக்கு முன்பிருந்தே அந்த பகுதிகளில் தொடர் கனமழை பெய்கிறது.
இன்று காலை நிலவரப்படி நாலுமுக்கில் 30 மில்லிமீட்டரும், ஊத்து எஸ்டேட்டில் 26 மில்லி மீட்டரும் மழை பெய்தது. காக்காச்சி, மாஞ்சோலையி லும் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. தொடர்மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. இதனால் 14-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை நீடிக்கிறது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம் அணை நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்தபோதிலும் வினாடிக்கு 1,084 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 143 அடி கொண்ட அந்த அணை நீர் இருப்பு இன்று மேலும் 1 அடி உயர்ந்து 108 அடியை கடந்துள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 1 அடி உயர்ந்து 121.32 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 102 அடியை தொட்டது.
மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் குளிர்ந்த ஈரப்பதமான மெல்லிய சாரல் காற்று வீசியபடி இருந்தது. இதனால் சீதோஷண நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டது. வடகிழக்கு பருவமழையால் மாவட்டத்தில் இந்த மாதத்தில் கடந்த 23-ந்தேதி வரை 198.95 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. இது வழக்கமான அளவான 166 மில்லிமீட்டரை விட 19.85 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 498 ஹெக்டேர் நெல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. குளங்களை பொருத்தவரை 100-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை நகர பகுதிகளான தென்காசி மற்றும் செங்கோட்டை சுற்றுவட்டாரங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. சங்கரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் மெல்லிய சாரல் அடித்தது. ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த மேற்கு திசை சாரல் காற்று வீசியது.
ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை காலத்தின்போது வீசும் காற்றை போல வீசியதால் சீதோஷண நிலை மாறியது.
அணைகளை பொறுத்தவரை குண்டாறு அணை பகுதியில் 6 மில்லிமீட்டர் மழை பெய்தது.
இந்த அணை மூலமாக செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1,200 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக இந்த அணை நிரம்பி வழியும் நிலையில் விவசாய பணிகள் தீவிரம் எடுத்துள்ளது.
கடனா அணை நீர்மட்டம் 58½ அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 69½ அடியாகவும் இருக்கிறது. மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று காலை 129.25 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 48 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதியில் 3 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
அந்த அணை நிரம்ப இன்னும் 3 அடி தண்ணீர் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றும் காலை முதலே பரவலாக மழை பெய்வதால் இன்று இரவுக்குள் அணை நீர்மட்டம் முழு கொள்ள ளவை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை கழுகுமலை சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது. வைப்பாறு, காடல்குடி பகுதியில் லேசான சாரல் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள் ளனர். கோவில்பட்டி சுற்ற வட்டாரத்தில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.