கொலை நடந்த இடம்
உத்தமபாளையம் அருகே நிலத்தகராறில் 2 பேர் கொலை
- நேற்று இரவு இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
- படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முத்துமாயனின் உறவினர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள அனுமந்தன்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது65). இவரது மனைவி விஜயா (57). இவர்களது மகன் பார்த்திபன் (32) காஷ்மீர் மாநிலம் லடாக்கில் ராணுவத்தில் பணிபுரிந்து தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
ராஜேந்திரனுக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சுந்தர் (65) என்பவருக்கும் நடைபாதை பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இரு தரப்பினரும் அடிக்கடி மோதிக்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு அவர்கள் இரு தரப்பினருக்கும் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ராஜேந்திரன் குடும்பத்தினர் ஒரு தரப்பாகவும், சுந்தர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஒரு தரப்பாகவும் அரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரமாக மோதிக்கொண்டனர்.
இந்த மோதலில் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த முத்துமாயன் (80) என்பவருக்கு கடுமையான அரிவாள் வெட்டு விழுந்ததால் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ராணுவ வீரர் பார்த்திபன், அவரது தாய் விஜயா, சுந்தர், அவரது மகன் சூர்யா ஆகியோரும் படுகாயம் அடைந்து உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட முத்துமாயனின் உறவினர் சுந்தர் (65) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலும் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இரு தரப்பினர் மோதலால் அப்பகுதியில் பதட்டமான சூழல் உருவானது. மீண்டும் அங்கு மோதல் உருவாகாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர் பார்த்திபன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது உத்தமபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.