தமிழ்நாடு

செல்போனில் பேசியதை கண்டித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்பு

Update: 2023-06-08 09:29 GMT
  • கீர்த்தனா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.
  • மனமுடைந்த கீர்த்தனா கடந்த 5-ந்தேதி, வீட்டை விட்டு வெளியேறினார்.

ஆப்பக்கூடல்:

கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரன் (28). இவரது மனைவி கீர்த்தனா (24). இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்டம் பவானி, ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பத்தி தாளக்குட்டை புதூரில் ஒரு தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தனர், கீர்த்தனாவின் சகோதரரும் இந்த தோட்டத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தனா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதை அவரது சகோதரன் கண்டித்தார். ஆனால் அதை கேட்காமல் கீர்த்தனா தொடர்ந்து செல்போனில் பேசி வந்தார். இதையடுத்து அவரது சகோதரர் சிம் கார்டை பிடுங்கி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த கீர்த்தனா கடந்த 5-ந்தேதி, வீட்டை விட்டு வெளியேறினார், கீர்த்தனாவை காணவில்லை என்று அவரது தாய் ஜெயமாளுக்கு, கணவர் வீரபத்திரன் தகவல் கொடுத்தார். இதையடுத்து மாயமான கீர்த்தனாவை உறவினர்கள் தேடி வந்தனர்.

இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் கீர்த்தனா பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது கணவர் வீரபத்திரன் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது பிணமாக கிடப்பது கீர்த்தனாதான் என்று உறுதி செய்தனர்.

இதையடுத்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சிம்கார்டை பிடுங்கியதால் மனம் உடைந்து கீர்த்தனா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே திருமணமான 2 ஆண்டுகளில் கீர்த்தனா இறந்ததால் இதுகுறித்து ஆர்.டி.ஓ.வும் விசாரணை நடத்துகிறார்.

செல்போனில் பேசியதை கண்டித்ததால் வீட்டை விட்டு மாயமான இளம்பெண் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News