தமிழ்நாடு செய்திகள்

மது விற்பனை நேரத்தை ஏன் மாற்றக்கூடாது?- அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி

Published On 2022-11-29 08:49 IST   |   Update On 2022-11-29 08:49:00 IST
  • மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது.
  • அரசு ஒரு நடவடிக்கை எடுத்தால், மதுப்பிரியர்கள் மாற்றுவழியை யோசிக்கின்றனர்.

மதுரை:

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனித்தனியாக மதுரை ஐகோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனுக்களில், தமிழகத்தில் 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்க தடை விதிக்க வேண்டும். அதேபோல டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றி அமைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்குகளை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மனுதாரர்களின் கோரிக்கை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் மதுபான விற்பனை கடைகள் குறைவான நேரம் செயல்படுகின்றன என்றார்.

அதற்கு நீதிபதிகள், ஆனால் மது விற்பனையில் பிற மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளது. மது விற்பனை நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றுவதற்கு ஏன் பரிசீலிக்கக்கூடாது?" என கேள்வி எழுப்பினர்.

இதற்கு அரசு வக்கீல், "கொரோனா காலகட்டத்தில் இங்கு கடைகள் அடைத்திருந்த நேரத்தில் அக்கம்பக்கத்து மாநிலங்களில் இருந்து மது வாங்கி வந்ததாக ஏராளமான வழக்குகள் பதிவாகி உள்ளன. அரசு ஒரு நடவடிக்கை எடுத்தால், மதுப்பிரியர்கள் மாற்றுவழியை யோசிக்கின்றனர். 21 வயதுக்கு கீழ் உள்ளர்களுக்கு மது விற்பனை செய்வதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள், 21 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபானம் விற்பதை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் அரசுக்கு வந்த பரிந்துரைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 1-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

Similar News