தமிழ்நாடு

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

குப்பை கிடங்கு அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு- கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Published On 2022-12-26 08:15 GMT   |   Update On 2022-12-26 08:15 GMT
  • கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.
  • 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர்.

கடலூர்:

கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் கிராம பொது மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இன்று காலை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து கடலூர் அருகே வெள்ளப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குண்டு சாலையில் திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக நடந்து வந்து கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் வைத்திருந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

வெள்ளப்பாக்கம் ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் மருதாடு, அழகியநத்தம், இரண்டாயிர விளாகம், நத்தப்பட்டு, முள்ளி கிராம்பட்டு பகுதியில் சுமார் 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றோம்‌. எங்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் கடலூர் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள தென்பெண்ணை ஆற்றின் அருகே மாநகராட்சி குப்பையை கொட்டுவதால் குடிநீர் பாதிப்பு ஏற்படுவதோடு மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தையும் அதனை சார்ந்து வாழும் விவசாயக் கூலி மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.

மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் இத்திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து போலீஸ் டிஎஸ்.பி. கரிகால் பாரிசங்கர், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுவாக வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து 15 பேரை அழைத்துச் சென்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து கோரிக்கைகள் தொடர்பாக பேச அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News