தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், இ.டி.க்கும் பயப்படமாட்டோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-06-19 05:49 IST   |   Update On 2023-06-19 05:49:00 IST
  • அரசியல் ஜல்லிக்கட்டில் பின்வாசல் வழியாக வர பாசிச கட்சி முயற்சி செய்கிறது.
  • வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியை விரட்டியடிப்போம் என்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

புதுக்கோட்டை:

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் தடையை நீக்கி சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தமிழக அரசின் வக்கீல்கள் மூலம் வாதாடி பெற்று தந்தமைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஜல்லிக்கட்டு பேரவைகளின் சாா்பில் புதுக்கோட்டையில் சிப்காட் அருகே நேற்று மாலை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஜல்லிக்கட்டினை நடத்த விடாமல் ஒரு கும்பல் போராடியது. ஆனால் தமிழர்களின் அடையாளம் ஜல்லிக்கட்டு என்பதற்கு நீங்கள் நடத்திய போராட்டம் தான் காரணம் என அனைவரும் அறிவார்கள். தமிழகத்தில் பாசிச கட்சி அரசியலில் ஜல்லிக்கட்டை புதிதாக தொடங்கியிருக்கிறார்கள். அந்த ஆட்டத்தை கூட அவர்களால் நேர்மையாக ஆடமுடியவில்லை. பின்வாசல் வழியாக வருகின்றனர். ஜல்லிக்கட்டை பொறுத்தவரை வாடிவாசல் வழியாக தான் காளைகள் வரும். ஆனால் பாசிச கட்சி புறவாசல் வழியாக தான் வருகின்றனர். அதனை தமிழக மக்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக போராடியதற்கு கிடைத்த வெற்றி. ஜல்லிக்கட்டுக்கான தடை விதிக்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் தான். மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தியது அ.தி.மு.க. அரசு.

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் நுழைய பா.ஜ.க. முயற்சி செய்து வருகிறது. பா.ஜ.க.வின் கிளை கழகமாக அ.தி.மு.க. மாறிவிட்டது. மத்திய அரசின் அடக்குமுறையை கண்டு தி.மு.க. என்றும் பயந்தது கிடையாது.

எத்தனை மோடி, அமித்ஷாக்கள் வந்தாலும் தமிழகத்தை ஒன்றும் செய்யமுடியாது. பா.ஜ.க.வின் தொண்டர் படை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ. தான். 2014-ம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு அமலாக்கத்துறை 121 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளது. இதில் 115 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள். இதேபோல தான் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 18 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மோடியிடம் நெருக்கமாக உள்ள அதானியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தவில்லை. நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், இ.டி.க்கும் பயப்படமாட்டோம்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாசிச கூட்டணியை விரட்டியடிக்க வேண்டும். 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அடிமைகளை விரட்டியடித்தோம். வரும் பாராளுமன்ற தேர்தலில் அடிமைகளின் எஜமானர்களை விரட்டியடிப்போம் என தெரிவித்தார்.

Tags:    

Similar News