தமிழ்நாடு

பைன் பாரஸ்ட் பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

சாரல் மழையுடன் இதமான சீதோஷ்ணம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2023-06-18 06:02 GMT   |   Update On 2023-06-18 06:02 GMT
  • கோடை விடுமுறையை கொண்டாட பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.
  • இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசி கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை கொண்டாட பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர். இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். கோடை சீசனில் பிரையண்ட் பூங்காவில் நடைபெற்ற கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி ஆகியவற்றை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தரை பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. 100 டிகிரியைத் தாண்டி வெயில் சுட்டெரிப்பதால் வார விடுமுறை நாளான நேற்றும், இன்றும் சுற்றுலாப் பயணிகள் மோயர்சதுக்கம், பைன் மரச்சோலை, தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா, செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, படகுக் குழாம் போன்ற பகுதிகளில் அதிகமாக குவிந்தனர்.

தற்போது கொடைக்கானலில் அவ்வப்போது சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் இதமான சீதோஷ்ணம் நிலவி வருகிறது. மேலும் வரும் காலங்களில் இந்த இதமான சூழலை அனுபவிக்க கொடைக்கானலில் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை மிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களில் வாகன நிறுத்துமிடங்களை இன்னும் அதிகரிக்க வேண்டும் எனவும் கோடை விடுமுறை முடிந்த பின்பும் இன்னும் தாங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிப்பதாகவும், இதற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தித்தர சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News