எண்ணெய் சட்டி, கரண்டிகளுடன் வந்த விவசாயிகள்.
டெல்டாவை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி விவசாயிகள் தர்ணா போராட்டம்- தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
- போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
- விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் மாணவர்களின் கல்விக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது விவசாய சங்கத்தை சேர்ந்த கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் கையில் எண்ணெய் சட்டி மற்றும் கரண்டியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர் . இதனை பார்த்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து எண்ணெய் சட்டி, கரண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்ற விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்த ஆண்டு காவிரி நீர் இல்லாமல் குறுவை, சம்பா பயிர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக மத்திய , மாநில அரசு அறிவித்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மின்மோட்டார் மூலம் சாகுபடி செய்யக்கூடிய விவசாயிகளுக்கு மும்மனை மின்சாரம், 20 மணி நேரம் தடையில்லாமல் வழங்க வேண்டும்.
விவசாயிகளின் பயிர் கடன் மற்றும் மாணவர்களின் கல்விக் கடன் ஆகியவற்றை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு குழு ரமேஷ் உள்பட விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ள நிலையில் போதிய தண்ணீர் இன்றி காய்ந்து நோய் தாக்குதல் ஏற்பட்டு வருவதால் கரும்பு விவசாயிகளுக்கும் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.