தமிழ்நாடு

கொள்ளையடித்த வாலிபர்களை சாதுர்யமாக சிக்கவைத்த பெண்- மிளகாய் பொடியை தூவியபோதும் அஞ்சாமல் போராட்டம்

Published On 2023-11-30 09:15 GMT   |   Update On 2023-11-30 09:15 GMT
  • கோமளம் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு அவர் பேச முடியாமல் இருப்பதை பார்த்தார்.
  • அதிர்ச்சியடைந்த அனிதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார்.

கோவை:

கோவை சித்தாபுதூர் அருகே உள்ள புதியவர் நகரை சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி கோமளம் (வயது 66). இவரது கணவர் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதனால் கோமளம் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டு இருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வீட்டிற்குள் அதுமீறி நுழைந்தனர். இதனை பார்த்த மூதாட்டி சத்தம் போட்டார். உடனடியாக அந்த வாலிபர்கள் கோமளத்தின் கைகளையும், வாயையும் துணியால் கட்டினர். பின்னர் அவர் அணிந்து இருந்த செயின், கம்மல், வளையல் ஆகியவற்றை பறித்தனர். இதனை தொடர்ந்து வாலிபர்கள் வீட்டின் பீரோவில் இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

கோமளத்துக்கு அவரது சகோதரர் மனைவி அனிதா என்பவர் சாப்பாடு கொண்டு வருவது வழக்கம். இதேபோல இரவு சாப்பாடு சமைத்து எடுத்துக்கொண்டு கோமளத்துக்கு கொடுப்பதற்காக சென்றார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவை யாரும் திறக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அனிதா ஜன்னல் வழியாக வீட்டிற்குள் எட்டிப்பார்த்தார். அப்போது வீட்டிற்கு 2 வாலிபர்கள் நிற்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும் கோமளம் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்டு அவர் பேச முடியாமல் இருப்பதை பார்த்தார். பின்னர் அனிதா வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டினார். இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர்கள் கதவை திறக்கும்படி கத்தினர். கதவை திறக்கவில்லை என்றால் கோமளத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்த அனிதா கதவை திறந்தார். அப்போது அந்த வாலிபர்கள் அவர்கள் கையில் வைத்து இருந்த மிளகாய் பொடியை முகத்தில் தூவி விட்டு தப்பி ஓடினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் தப்பி ஓடிய 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் பொதுமக்கள் 2 பேரையும் காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த சதீஷ் (21), லிக்னேஷ்வரன் (25) என்பது தெரிய வந்தது.

போலீசார் இவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் கோவை அருகே உள்ள நீலாம்பூரில் தங்கி இருப்பதும், மூதாட்டி தனியாக வசிப்பதை கண்காணித்து கொள்ளையடிக்க வந்ததும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட சதீஷ் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News