தமிழ்நாடு செய்திகள்

சென்னை அமைந்தகரையில் விபத்து- பைக் மோதி கைக்குழந்தையுடன் பெண் பலி

Published On 2022-10-09 09:07 IST   |   Update On 2022-10-09 12:52:00 IST
  • பூங்குழலி மற்றும் குழந்தை தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
  • போதையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளைஞரிடம் போலீஸ் விசாரணை.

சென்னை அமைந்தகரை அண்ணா ஆர்ச் அருகே இன்று அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில் 6 மாத கைக்குழந்தையுடன் இளம்பெண் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்குழலி 28 வயது இளம் பெண்ணான இவரது குடும்பத்தினர் என்.எஸ்.கே.நகர் அண்ணா ஆர்ச் பகுதியில் புதிதாக ஸ்டிக்கர் கடை ஒன்றை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இதன்படி இன்று அதிகாலையில் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் நடைபெற்றன. இந்த கடை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக பூங்குழலி தனது 6 மாத பெண் குழந்தை குயிலிசியுடன் கே.கே.நகரில் இருந்து புறப்பட்டு அண்ணா ஆர்ச்சுக்கு வந்தார்.

பின்னர் அதிகாலை 3.30 மணி அளவில் தனது கை குழந்தையுடன் வந்து இறங்கினார்.

கடை திறப்பு விழாவில் கலந்து கொள்ளப்போகும் சந்தோஷத்தில் இருந்த பூங்குழலி தனது 6 மாத கைகுழந்தையுடன் சாலை யை கடந்தார். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென பூங்குழலி மீது அதிவேகமாக மோதியது. இதில் பூங்குழலி தனது கைகுழந்தை குயிலிசியுடன் தூக்கி வீசப்பட்டார்.

மோட்டார் சைக்கிளை வாலிபர் ஒருவர் மது போதையில் ஓட்டி வந்துள்ளார். இதனால் அவரால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியவில்லை. மோட்டார் சைக்கிள் மிகவும் வேகமாக வந்து மோதியதால் பூங்குழலி ஒரு பக்கமும், குழந்தை குயிலிசி இன்னொரு பக்கமும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்கள்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா ஆர்ச் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கோர விபத்தில் உயிரிழந்த பூங்குழலி மற்றும் 6 மாத கைகுழந்தை குயிலிசியின் உடல்களை பார்த்து போலீசாரும் கண்கலங்கினார்கள்.

விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் எதிரில் கடை திறப்பு விழாவில் பங்கேற்றிருந்த பூங்குழலியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஓடிவந்து பார்த்தனர்.

அவர்கள் தாய்-மகளின் உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அதிகாலையில் சாலையில் சென்றவர்களும் இந்த விபத்தை பார்த்து கண்ணீர் வடித்தனர்.

இதை தொடர்ந்து போக்குவரத்து போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் போதையில் இருந்தார். அவருடன் மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவரும் வந்திருந்தார்.

இருவரும் வெளியில் சென்றுவிட்டு திரும்பியபோதுதான் விபத்தை ஏற்படுத்தி தாய்-மகளின் உயிரை பறித்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்புக்கு காரணமாக இருந்த வாலிபர் மீது கொலை வழக்குக்கு இணையான சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாலிபரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News