தமிழ்நாடு செய்திகள்

வத்தலக்குண்டு சந்தையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி கிலோ ரூ.55க்கு விற்பனை

Published On 2023-08-03 10:46 IST   |   Update On 2023-08-03 10:46:00 IST
  • கடந்த சில வாரங்களாக வத்தலக்குண்டுவிலும் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது.
  • ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று இரவு தக்காளி வரத்து அதிகரித்தது.

வத்தலக்குண்டு:

தமிழகத்தில் கடந்த 1 மாதமாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து சாமானிய மற்றும் ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் ஒரு கிலோ தக்காளி ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உழவர் சந்தையிலும் விலை அதிகரித்து விற்பனையாவதால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை குறைத்தும், தவிர்த்தும் வருகின்றனர். இந்நிலையில் வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு அதிக அளவு தக்காளி வந்ததால் அதிரடியாக விலை குறைந்தது.

வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு தேனி, வருஷநாடு, சின்னமனூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் தக்காளி கொண்டு வரப்படுகிறது. சராசரியாக 15 டன் தக்காளி இங்கு வரத்து இருக்கும். இங்கிருந்துதான் திங்கட்கிழமை நடக்கும் பட்டிவீரன்பட்டி சந்தைக்கும் தக்காளி செல்லும். இது தவிர பல்வேறு ஊர்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படும்.

கடந்த சில வாரங்களாக வத்தலக்குண்டுவிலும் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ ரூ.150 வரை விற்பனையானது. இந்நிலையில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து நேற்று இரவு தக்காளி வரத்து அதிகரித்தது. சுமார் 12 டன் வரை தக்காளி வந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஒரு கிலோ ரூ.55 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் ஏராளமானோர் போட்டி போட்டு தக்காளியை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர். மலிவு விலையில் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூறினாலும், பெரும்பாலான கடைகளில் இது கிடைக்காததால் மக்கள் ஏமாற்றத்தில் இருந்தனர்.

இந்நிலையில் வத்தலக்குண்டு மார்க்கெட்டிலேயே கிலோ ரூ.55க்கு தக்காளி கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர். ஒரு சில வியாபாரிகள் ஏற்கனவே தாங்கள் வாங்கி வைத்திருந்த தக்காளியை பழைய விலைக்கே கூடுதலாக விற்றனர். புதிதாக வந்த தக்காளியை நாளை முதல் விற்பனை செய்வதாக தெரிவித்தனர். வரத்து அதிகரிக்கும் சமயங்களில் தக்காளியை பதுக்கி வைத்து விற்பனை செய்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News