தமிழ்நாடு

கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்- அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு

Published On 2022-11-19 06:18 GMT   |   Update On 2022-11-19 06:18 GMT
  • கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும்.
  • பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னை:

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதால் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இதையடுத்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட கலெக்டர்களும் மேற்கொள்ளவும் பேரிடர் தடுப்பு பணிகளை தயார்படுத்தவும் உஷார்படுத்தப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதால் தமிழகத்தில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், இது தமிழக கடற்கரை நோக்கி வருவதால் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.

வானிலை மையத்தின் முன் அறிவிப்பு எச்சரிக்கையின்படி 20, 21, 22 ஆகிய தேதிகளில் கனமழை, மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் முன் எச்சரிக்கைக்கான தடுப்பு பணிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை அனைத்து மாவட்ட நிர்வாகமும் எடுக்க வேண்டும். பெருநகர சென்னை மாநகராட்சியும், தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News