காவிரியில் தண்ணீர் திறக்க கோரி தமிழக அரசு 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
- கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
தமிழகத்தில் டெல்டா பாசன விவசாயத்துக்காக ஒவ்வொரு மாதமும் காவிரியில் இருந்து எவ்வளவு தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறது.
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி தண்ணீரை பிலிகுண்டுலுவில் அளவீடு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ள உத்தரவுபடி ஜூன் வரை ஆகஸ்டு 11-ந்தேதி முதல் தமிழ்நாட்டுக்கு 53.77 டி.எம்.சி. தண்ணீரை காவிரியில் கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால் கர்நாடகா அரசு வெறும் 15.73 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே திறந்துஉள்ளது. 37.97 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படவில்லை.
இதையடுத்து தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர் பங்கை கர்நாடகா தர வேண்டும் என்று வலியுறுத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. அதுபோல காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைப்பிடமும் வலியுறுத்தப்பட்டது. என்றாலும் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் டெல்லியில் நேற்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பிரதிநிதிகள் காவிரியில் 37.97 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
ஆனால் கூட்டத்தில் அதற்கான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து கூட்டத்தில் இருந்து தமிழக நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்பட அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆய்வு கூட்டத்தில் தமிழக டெல்டா பாசனத்தை காப்பாற்றும் வகையில் முடிவுகள் எட்டப்படாததால் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "கர்நாடகாவில் உள்ள 4 அணைகளிலும் போதுமான அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் அளிக்க கர்நாடக அரசுக்குத்தான் மனம் இல்லை" என்று கூறி இருந்தார்.
கோர்ட்டு மூலம் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை பெற்றே தீருவோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது குறித்து நேற்றும் இன்றும் தொடர் ஆலோசனை நடத்தப்பட்டது.
கர்நாடகத்திடம் இருந்து உரிய தண்ணீரை பெற கோர்ட்டுக்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்ற நிலை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவதற்கான ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.
இன்றும், நாளையும் சுப்ரீம் கோர்ட்டு விடுமுறையாகும். எனவே திங்கட்கிழமை காவிரி நீர் விவகாரத்தில் தலையிட்டு தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் டெல்லி செல்ல உள்ளனர். திங்கட்கிழமை அவர்கள் தாக்கல் செய்யும் மனு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.
கர்நாடகாவில் உள்ள 4 அணைகளின் மொத்த தண்ணீர் கொள்ளளவு 114.571 டி.எம்.சி. ஆகும். தற்போது 4 அணைகளிலும் சுமார் 94 டி.எம்.சி. அளவுக்கு தண்ணீர் இருக்கிறது. மொத்த நீர் இருப்பில் இது 82 சதவீதம் ஆகும்.
கர்நாடகாவிடம் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் தமிழகத்துக்கு உரிய பங்கை திறந்து விடக்கோரி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வாய்ப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கர்நாடகா உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட்டால்தான் டெல்டா மாவட்டங்களில் காய்ந்து கொண்டிருக்கும் பயிர்களை காப்பாற்ற முடியும்.