திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளை
- கன்னிராஜபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார்.
- தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் ரூ.1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் நாகலிங்கம். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1-ந் தேதி அவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றார். இந்த நிலையில் நாகலிங்கத்தின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நாகலிங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
மேலும் பூஜை அறையில் வைத்திருந்த ரூ. 7 லட்சத்து 66 ஆயிரத்தை கொள்ளையர்கள் கவனிக்காததால் அது தப்பியது. இதுகுறித்து நாகலிங்கம் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.