தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் அரசியல் தலையீடு- திருமாவளவன் குற்றச்சாட்டு
- வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு, இன்னும் 3 நாட்கள் இடைவெளி தான் உள்ளன.
- தமிழ்நாட்டிற்கு ஒரு வார கால இடைவெளி கூட தராமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆலந்தூர்:
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இதனால்தான் தேர்தல் ஆணையம், தேர்தல் தேதிகளை தாமதமாக அறிவித்திருக்கிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு, இன்னும் 3 நாட்கள் இடைவெளி தான் உள்ளன.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் அவர்களின் கூட்டணிகளையே இன்னும் முடிவு செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கு ஒரு வார கால இடைவெளி கூட தராமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் 7 கட்டங்கள், 5 கட்டங்களாக தேர்தல்கள் நடக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக, ஒரே நாளில் தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பில், ஏதோ அரசியல் தலையீடு இருப்பதாக தெரிகிறது. தமிழ் நாட்டை குறி வைத்து தான், இந்தத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஒப்புகைச் சீட்டுகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்ட பின்பு தான், தேர்தல் முடிவு அறிவிக்க வேண்டும் என்று, அனைத்து எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்தது. ஆனால் தேர்தல் ஆணையம், அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.
தமிழ்நாட்டில் முதல் கட்ட தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும், இடையே 45 நாட்கள் இடைவெளிகள் உள்ளன.
இவ்வளவு நாட்கள் இடைவெளி எதற்காக? நாடு முழுவதும் 3 கட்டங்களாக தேர்தலை நடத்தி முடிக்க முடியும். கடந்த காலங்களில் ஒரே நாளில், நாடு முழுவதும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் இரண்டையும் சேர்த்து நடத்திய நாடு இந்தியா. அதைப்போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், நமது நாட்டில் உள்ளன.
தமிழ்நாட்டில் விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்கள் பற்றிய அறிவிப்பு அடுத்த இரண்டு நாட்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.