தமிழ்நாடு

பா.ஜ.க. ஆட்சியில் பணக்கார நாடான இந்தியாவில் மக்கள் ஏழைகளாக உள்ளனர்- சுப.வீரபாண்டியன்

Published On 2024-04-16 06:57 GMT   |   Update On 2024-04-16 06:57 GMT
  • ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது.
  • நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் தொகுதி சி.பி.எம். வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது:-

கடந்த சில நாட்களுக்கு முன்பு ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடினார்கள். தப்பித் தவறி மோடிக்கு வாக்களித்தால் இனி ரம்ஜான் கொண்டாட முடியாது. அடுத்த தலைமுறையினர் தேர்தலை பார்க்கவே முடியாது. எனவே பா.ஜ.க.வுக்கு வாக்களித்து இன்னொரு ஹிட்லரை உருவாக்கிட வேண்டாம்.

சமத்துவம் பெருக சமூக நீதி மண்ணில் இருக்க ஜாதி மதங்களை கடந்து மக்கள் வாழ்க்கை முன்னேற வேண்டுமானால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். பிரதமர் மோடி நெல்லையில் நடந்த கூட்டத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நனவாக்குவேன் என்றார். ஜெயலலிதாவின் இலக்கு மோடியா, லேடியா என்பதுதான். மோடியை தமிழகத்தில் இருந்து அகற்றுவதுதான் இலக்காக கொண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜி.எஸ்.டி. என்பது வரி இல்லை. வழிப்பறி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் சி.ஏ.ஏ. சட்டத்தை ஆதரித்த அ.தி.மு.க.வுடன் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி வைத்துள்ளது. இது உங்களுக்கு உறுத்தலாக இல்லையா?

ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி உள்ளது என்றால் அதற்கு அடிப்படை காரணமாக தமிழகம் உள்ளது. மக்கள் மீது வரியை சுமத்தும் மத்திய அரசு வங்கி கடன்களில் வராக்கடன் என ரூ.66 லட்சம் கோடியை அறிவித்துள்ளது. இதில் ரூ.14 லட்சம் கோடியை அதானி, அம்பானி மற்றும் கார்ப்பரேட் நிறுவன முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்துள்ளது.

நம்மிடம் இருந்து பணத்தை வாங்கி அதானிக்கும், அம்பானிக்கும் வழங்கும் முறைதான் வழிப்பறியாகும். மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. அதே நேரம் தனி நபர் வருமானத்தில் 121-வது இடத்தில் உள்ளது. இந்தியா பணக்கார நாடாக இருந்த போதிலும், இந்திய மக்கள் ஏழைகளாக உள்ளனர். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனி நபர் வருமானம் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News