தமிழ்நாடு செய்திகள்

மாயாற்றில் வெள்ளப்பெருக்கால் பரிசல் இயக்க தடை விதிப்பு: மாணவர்கள்-கிராம மக்கள் தவிப்பு

Published On 2022-08-10 11:07 IST   |   Update On 2022-08-10 11:07:00 IST
  • கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும்.
  • மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது தெங்கு மரஹடா, கள்ளம்பாளையம் மலை கிராமம். இங்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்திற்கு செல்ல மாயாற்றை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த பகுதி மக்கள் தினமும் பரிசல் மூலம் வியாபாரத்திற்காக சத்தியமங்கலம், கோத்தகிரி செல்கின்றனர்.

இதேபோல் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்காகவும் பரிசலில் சென்று வருகின்றனர். இங்குள்ள கல்லூரி மாணவர்களும் பரிசல் மூலமே கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு பரிசல் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது.

ஆனால் மழைக்காலங்களில் திடீரென மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுவிடும். இந்த மாதிரி நேரங்களில் ஆபத்தை உணராமல் மக்கள் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பவானிசாகர் நீர் பிடிப்பு பகுதியான அவலாஞ்சி, பைக்காரா, குன்னூர், அப்பர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால். மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேபோல் பைக்காரா அணை நிரம்பியுள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கூடுதல் நீர் வர வாய்ப்புள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று கல்லூரிக்கு மாணவர்கள் செல்ல முடியாமல் அவதி அடைந்தனர்.

அதேபோல் வியாபாரிகள், விவசாயிகள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் கோத்தகிரி தாசில்தார் மற்றும் குன்னூர் சப்-கலெக்டர் ஆகியோர் முகாமிட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Similar News