தமிழ்நாடு

சென்னையில் தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடம் ஒதுக்கப்படுகிறது

Published On 2023-05-23 06:00 GMT   |   Update On 2023-05-23 07:02 GMT
  • 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன.
  • விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.

சென்னை:

சென்னையில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு வரும் புகார்களில் பெரும்பாலானவை நாய்கள் தொடர்பானவை.

நாய்கள் தொடர்பாக 1913 உதவி எண்ணில் தினமும் 80 புகார்கள் வருகின்றன. இதில் பல புகார்கள் குடியிருப்பு பகுதிகளில் நாய்களுக்கு உணவளிக்கும் நாய் பிரியர்கள் தொடர்பானவை ஆகும்.

சென்னையில் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து தடுப்பூசி போட்டு அதே பகுதிகளில் மீண்டும் விடப்படுகிறது. ஆனால் இதற்கு பொதுமக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை பிடிபட்ட 20,385 நாய்களில் 15,696 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு மீண்டும் குடியிருப்பு பகுதிகளில் விடப்பட்டுள்ளன. குடியிருப்பு பகுதியிலேயே நாய்களுக்கு நாய் பிரியர்கள் உணவளிப்பதால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு தேவையற்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன.

இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவளிப்பதற்காக இடம் ஒதுக்குவது குறித்து சென்னை மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இது தொடர்பாக விலங்குகள் நல தன்னார்வலர்களுடன் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண குடியிருப்போர் சங்கங்களுடன் கலந்தாலோசிக்க குடிமை அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களுக்கு உணவு அளிக்க தனி இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கலந்துரையாடல் கூட்டம் நடத்தப்பட்டது.

ஆனால் அதை மீறுபவர்களுக்கு தண்டனை பற்றி குறிப்பிடப்படவில்லை. ஆனால் விதிகளை மீறி கண்ட கண்ட இடங்களில் நாய்களுக்கு உணவளிப்பவர்களுக்கு தண்டனை விரைவில் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

Similar News